நாடாளுமன்ற தேர்தல் திகதியில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதி ஓரிரு நாட்கள் மாற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 வது பிரிவின்படி தேர்தலுக்கு நாட்கள் ஒதுக்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும் , ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29 ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சட்ட ஆலோசனைக்கு பின், எதிர்காலத்தில், நாடாளுமன்ற தேர்தல் திகதி மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, புதிய திகதி குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *