மக்களின் பொறுப்பற்ற செயல்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!
இன்றைய சூழ்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொஸ்கம வைத்தியசாலையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
3 நாட்கள் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிந்தும் பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு வந்துள்ளார்கள்.
கடந்தாண்டு 2 மாதங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த போதும் இவ்வாறானதொரு தளர்வு ஏற்படுத்தப்படவில்லை . மக்களுக்காவே பயணக்கட்டுபாடு அமுல்படுத்தப்படும் மற்றும் தளர்த்தப்படும் விடயங்களை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போது வாகனங்களைப் பயன்படுத்தவேண்டாமென கூறுவதால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். ஆனால் தமது உயிரின் பெறுமதி ஏனையோரை விட தமக்கே தெரிந்திருக்க வேண்டும்.
எனினும் இவ்வாறானதொரு பயணக்கபட்டுப்பாட்டு தளர்வுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தொற்றை மேலும் பரவச் செய்யும் வகையில் மிகவும் சொற்பமான பொறுப்பற்ற மக்கள் செயற்படுவதாலேயே சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது. இது ஏனைய மக்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அந்த பொறுப்பற்ற சொற்பமான மக்கள் ஒழுக்கத்துடன் செயற்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் முன்னுரிமைப் பட்டியலில் கிராம மட்டங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், குடும்ப நல அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், விவசாய அதிகாரிகள், அபிவிருத்தி அதகாரிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.