பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

20 பேர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மின் தகனம் செய்வதற்கு உள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்கள் தேங்கி காணப்பட்டுகின்றன.

பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடிய வசதிகள் உள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி 11 சடலங்கள் காணப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

யாழில் ஒரு மின் தகன மயானம் உள்ளது.

அதிலையே யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதனாலையே சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. தாமதங்களை கருத்தில் கொண்டு வெளி மாகாணத்தில் உள்ள மின் தகன மயானங்களுக்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்டுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதேவேளை, தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் , வெளிமாகாணங்களில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால் , அதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை தாம் பொறுப்பேற்பதாக முன் வந்துள்ளார்.

அதேவேளை , உயிரிழந்தவர் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர் எனில் மின் தகன செலவு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவற்றை நாம் நோயாளர் நலம்புரி சங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேவேளை வீட்டில் உயிரிழந்தவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியானால் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அறிவித்தால் , அது தொடர்பிலான நடவடிக்கைகளையும் வைத்தியசாலை பொறுப்பெடுக்கும்.

அவர்கள் வசதி குறைந்தவர்கள் எனில் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஊடாக , தியாகி அறக்கொடையை தொடர்பு கொள்ள முடியும் அவர்கள் அனைத்து செலவீனங்களை பொறுப்பேற்றுக்கொள்வார்கள். எனவே மக்கள் தமக்கு சளி , தடிமன் , காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பயமின்றி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் வைத்திய தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்தியசாலையின் பொது தொலைபேசி இலக்கங்களான 0212263261 மற்றும் 0212263262 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *