யாழ் நாகர்கோவில் பகுதியில் இரு தரப்பு மோதல்….. துப்பாக்கி சூடு நடந்தது என கூறும் மக்கள் – மறுக்கும் காவல்துறை!!
நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை (13/03/2023) பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14/03/2023) நடைபெறவிருந்தது.
அந்த நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்றுமுன்தினம்(12/03/2023) தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.
அது தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக நாகர்கோவில் பகுதிக்கு நேற்று(13/03/2023) மாலை காவல்துறையினர் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் காவல்துறையினர் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அந்த முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது,
ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி பல பேர் காயமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனபோதும்,
காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்துள்ளனர்.
இருப்பினும்,
சம்பவ இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியிலுள்ள ஆலய சப்பற கொட்டில் ஒன்றும் எரிந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால்,
அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.