ஸ்ரீலங்காவில் சீனத் தனிநாடு? வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!
ஸ்ரீலங்காவில் சீனத் தனிநாடு உருவாகிவிடும் எனும் எச்சரிக்கை எதிரணியினரால் விடுக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் நாளைய தினம் அறிவிக்கவுள்ளார்.
தலைநகர் கொழும்பை ஒட்டியதாக உள்ள கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் 400 ஏக்கருக்கும் அதிகமான கடற்பரப்பில் மணல் மற்றும் கற்கள் நிரப்பப்பட்டு சமதரையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிரப்பரப்பிற்கு கொழும்பு துறைமுக நகரம் அல்லது முதலீட்டு நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை நிர்வகிப்பதற்காக அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தை எதிர்க்கட்சியினர் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததோடு அதன் மீதான தீர்ப்பு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டால் நாட்டில் சீனத் தனிநாடு உருவாகும் என்றும், இது தேசிய பாதுகாப்பிற்கே ஆபத்தாகிவிடும் எனவும் எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டு பின்னர் இரண்டு நாட்கள் விவாதமும் இடம்பெறவுள்ளது