கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி….. உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி போராட்டம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்(Base Hospital – Mannar) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (13/08/2024) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும்.

இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததோடு அவற்றில், பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா?,

அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய்,

உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்,

மருத்துவத்துறையின் அறம் எங்கே,

சிந்துஜாவின் மரணம் இறப்பா?,கொலையா?,

நீதி நிழலாடுகிறதா?,

மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்களாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய் சிந்துஜாவின் பிள்ளை கலந்து கொண்டதோட பெண்கள் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட் தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *