ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!
ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட்
விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்,
கட்டுநாயக்கவின் பதில் தலைவர் என்.சி. அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.
இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது.
இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,
ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கிடையிலானது அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
அது தனிப்பட்ட சட்ட பிரச்சினையாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நீதித்துறை அமைச்சின் ஊடாக இது தொடர்பில் ரஷ்ய வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.