சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!
சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனின் மத்திய உயா் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது.
அந்த விண்கலத்தின் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னா், 1, 731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.
அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா். அதன் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.
அதன்படி,சந்திரனின் நிலப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீா் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். அதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.