சேதமடைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் : விதிக்கப்பட்ட தடை

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (18.10.2024) மு. ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் (Mannar) – யாழ்ப்பாணம் (Jaffna) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிப்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – வல்லைப் பாலமும் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

கடந்த (12.10.2024) அன்று வல்லைப் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது கோப்பாய் பிரதேச செயலகம் விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *