இதுவரையில் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு….. அமைச்சர் லசந்த அழகியவண்ண!!
இலங்கையில் கடந்த ஆறு வருடங்களில் மாத்திரம் லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஆகியவற்றின் எரிவாயு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் இன்று இந்த விடயத்தை தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களை அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு வலியுறுத்தினர்.
தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 12 எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சேகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கைகள் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்களிடம் ஆலோசனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆலோசனையின் அடிப்படையில், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் தற்போதைய நிலையில் எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களின் தரத்தில் ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உள்நாட்டு சிலிண்டர்களின் தரத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிறந்த தீர்மானம் ஒன்றை மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்த இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நிபுணர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அறிக்கைகளுக்காக காத்திருக்காது, மக்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.