இலங்கையில் சினிமா துறை சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,   புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த கூட்டுப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கை சினிமா துறையில் ஏராளமான தனித்துவமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், இலங்கை உலகளாவிய சினிமாவிற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களை வழங்கியுள்ளதாக அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் உள்ளூர் சினிமா துறையை ஒரு முக்கியத் துறையாக அறிவிக்காததன் விளைவாக, அதன் அளவும் வளர்ச்சியும் ஒரு சிறிய உள்ளூர் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய கொரோனா தொற்றுநோயால் உள்ளூர் சினிமா துறை நெருக்கடிகளை எதிர்கொண்டது. சினிமா துறையின் முன்னேற்றம் மற்றும் ஊக்குவிப்பின் மூலம் வாழ்வாதாரங்களின் எண்ணிக்கை, சமூக மற்றும் கலாசார, பொருளாதார மாற்றங்கள் மற்றும் சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளுக்கு உதவுதல் போன்ற பல நன்மைகளை அடைய முடியும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அது கணிசமான அளவில் பொருளாதாரத்திற்கு உதவும் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதன் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் சினிமாத்துறை மேம்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறதெனவும் அதில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *