வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு நிவாரணப் பணி உத்தியோகத்தர் மரணம்!!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் இரத்தினபுரி- கிரியெல்ல பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் ,
சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு,
236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 13 நிவாரணக்குழுக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.