நாட்டை அந்நிய நாடுகளுக்கு விற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கெதிராக யாழில் மாபெரும் போராட்டம்!!

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.க.செந்தில்வேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் உள்ள அரசியல் நிலைமையானது மக்களுக்கு விரோதமான செயற்பாடாகவும் மக்களுக்கு எதிரான செயலாகவும் காணப்படுகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தபோது மிகப்பெரிய லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆகிவிட்டேன் என்று பெருமிதம் கொள்ளப்ப்பட்டது.

அதை தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தாங்கள் பெற்றுவிட்டோம் மக்களுடைய ஆதரவினை முழுமையாக பெற்று விட்டோம் என சொன்னார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சில கட்சிகளை வளைத்துப் போட்டுக் கொண்டு 20வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்து இந்த நாட்டிலே ஒரு தனிநபர் சர்வாதிகாரம் தனி கட்சியினுடைய சர்வாதிகாரமாக ஒரு குடும்பத்தினுடைய சர்வாதிகாரமாக இந்த நாட்டிலே அரசியலை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனினும் இந்த நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக ஜனாதிபதியாக அமைச்சர்களாக காணப்படுகின்றார்கள். தற்பொழுது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருள் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.

இன்று ஒரு கிலோ அரிசியினுடைய விலை 150 ரூபாவாக காணப்படுகின்றது சீனி ஒரு கிலோ 130 ரூபாவாக காணப்படுகின்றது. எங்கள் நாட்டினுடைய உணவுத் தேவையின் தானிய வகைகளின் விலைகளும் உயர்வடைந்து காணப்படுகிறது. தற்போது கொரோனா என்ற திரை மறைவில் நமது நாடு அந்நிய நாட்டுக்கு விற்கப்படுகிறது.

அதாவது கடல்,தரை என்பன மறைமுகமாக இந்த அரசாங்கத்தினால் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. புதிய ஜனநாயக மாக்சிச கட்சி என்பது பொதுமக்களின் நலன் சார்ந்து செயற்படுகின்ற கட்சியாகக் காணப்படுகிறது.

எனவே மக்களினுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் குரல் கொடுப்பதற்கு தயாராகி வருகின்றோம். எமது நாட்டு வளங்கள் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக பொது மக்களோடு இணைந்து நமது ஜனநாயகம் மார்க்சிச கட்சியானது  குரல் கொடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *