சமூக ஊடகங்களை பயன்படுத்த பதிய ஒழுக்கக் கோவை!!
சிறிலங்காவின் பிம்பத்தை பாதுகாக்கும் வகையில் சமூக ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் நாட்டை அவமதிப்பதற்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாக, கடுமையான ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghec) அத்தகைய நகர்வுகளைக் குறைப்பதற்கு ஒழுக்கக் கோவையின் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த வாரம் தமது இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவரை கடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் கணக்கில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் ஒருவரை இனந்தெரியாதவர்கள் கடத்த முயற்சித்ததாக தெரிவித்திருந்தார்.
அரச புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட இனந்தெரியாதவர்கள் குறித்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும்,
சாணக்கியன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவு பொய்யானது என்பதோடு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக, காவல்துறை தெரிவித்ததாக, இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெறும் ஒவ்வொரு முறையும் இவ்வாறான பொய்யான கூற்றுக்கள் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.