‘நாட்டில் திடீரென மாறவுள்ள காலநிலை….. 8 மாவட்ட களுக்கு அவசர எச்சரிக்கை!!
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி,
கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,
திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வீசும் காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையுடனான வானிலைக்காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே,
அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.