முதலாம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கல்வி முறையா? எதிர்க்கும் அமைச்சர் பந்துல!!
இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில் இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் கல்வி கற்றுக்கொடுப்பதை தெளிவாக எதிர்க்கின்றேன்.
யுனிசெப் என்பது சிறுவர்களுக்காக முழு உலகமும் அங்கீகரித்த அமைப்பு. பிள்ளைகளுக்கு தமது தாய்மொழியிலேயே அடிப்படை கல்வியை வழங்க வேண்டும் என்ற அந்த அமைப்பின் கொள்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை. இதற்கு அமையவே எமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது சரத்தில் எந்த மொழியில் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அரசகரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆரம்ப கல்வியை வழங்க வேண்டும் என அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனால், இலங்கை பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு வாக்கு பலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை முதலில் மாற்ற வேண்டும்.
அத்துடன் யுனேஸ்கோ போன்ற அமைப்பின் அடிப்படையாக கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத நாடாக நாம் மாறிவிடுவோம். இது செய்யக் கூடிய காரியமா என்பது குறித்து கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டில் உள்ள கல்விசார் நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடலை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது என நான் நினைக்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.