சூர்யாவின் வாடிவாசல் கைவிடப்பட்டதா? – தயாரிப்பாளர் தாணு விளக்கம்
வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தயாரிப்பாளர் தாணு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக கலைப்புலி தாணுவின் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கில் இருந்து டுவிட் செய்யப்பட்டது. அந்த டுவிட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள தாணு, அந்த டுவிட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.
மற்றொரு டுவிட்டில், எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் என பதிவிட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினார்.