குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் (pakistan) இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் (gujarat) கைதான இலங்கை (sri lanka)யைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த முகம்மது நஸ்ரத் (வயது 35), முகம்மது பாரூக் (35), முகம்மது நப்ரன் (27), முகம்மது ரஸ்தீன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின. கைதான 4 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக

இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி சுனில் ஜோஷி (Sunil Joshi) கூறுகையில், ‘பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று கூற மறுத்துவிட்டனர்.

இருப்பினும், தாக்குதல் நடத்தும் இடம், நேரம் பற்றியும், நாச வேலைக்கான வெடிபொருட்கள் கிடைக்கும் இடம் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதி தெரிவிப்பார். அவரது உத்தரவுக்காக காத்திருந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் காவல்துறை விளக்கமறியல் அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கிய செல்போன்களில் உள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். பிடிபட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடமும் விசாரிக்கப்படும்.

பயங்கரவாதிகள்  இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக குஜராத் வந்துள்ளனர். எனவே குஜராத் காவல்துறையினருடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் மற்ற மாநில காவல்துறையினரும் சேர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துவோம். மத்திய புலனாய்வு அமைப்பின் உதவியையும் நாடுவோம்” என்று அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *