தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.