எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது!!
எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4910 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(11/07/2022) முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கையிருப்பு தீர்ந்தமையால் லிட்ரோ நிறுவனம் நீண்ட நாட்களாக தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில்,
3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று(10/07/2022) நாட்டை வந்தடைந்தது.
குறித்த கப்பல் நேற்று மாலை கெரவலப்பிட்டியவை சென்றடைந்தவுடன்
எரிவாயுவை இறக்கும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை,
இன்றைய தினம்(11/07/2022) 3,740 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் வருகை தரவுள்ளது.
அத்துடன்,
3,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில்,
நாளை(12/07/2022) முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் வீடுகளுக்கான எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்.