பாடசாலையில் பட்டினியால் மாணவர்கள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளது….. பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர்!!
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும்,பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.
சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் கூட்டத்தின் போது மயங்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மயங்கி விழும் மாணவர்களிடம் விசாரித்த போது,
அவர்கள் காலையில் உணவு சாப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் காலையில் உணவு சாப்பிடாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் சுமார் நான்கு பேர் வரை இருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.