தொடரும் சீரற்ற காலநிலை: யாழ்.அரச அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை!
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரியுள்ள
அத்துடன் கொரோனா தொற்று தொடர்பிலும் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட புயல் இலங்கையில் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த புயல் காரணமாக கடும் மழை பொழியும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடும் காற்று வீசும். இந்த பாதிப்புக்கள் குடா நாட்டிற்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.
கடற்படை, இராணுவம், பொலிசார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்தர்கள் இணைந்து ஒரு செயற்படுத்துகை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரம் கடமையில் இருந்து நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பார்கள்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30ஆம் திகதி முதல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்.
கரையோர மக்கள் விழிப்பாக கால நிலைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிப்போர் விரும்பின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தற்காலிகமாக தங்க முடியும். அவ்வாறு தங்க வசதி இல்லாதோர் பொது கட்டடங்களில் தங்க முடியும்.
அதேவேளை இவ்வாறாக பொது இடங்களில் தங்க செல்வோர் தற்போதைய கொவிட் -19 நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார பிரிவினர் அவை தொடர்பில் கண்காணிப்பார்கள்.
அத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்குமாறு கோருகின்றோம். அது அவர்களையும் பாதுகாக்கும் இந்த சமூகத்தையும் பாதுகாக்கும்.
குறிப்பாக கொரோனா தொற்று தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மக்களை கோருகின்றோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.