இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது 3,500 mt எரிவாயு தாங்கிய கப்பலொன்று!!
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது.
இதனால் இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.
கடந்த 2 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடு முழுவதிலும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை எரிபொருள் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.