நல்லூர், அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று இதுவரையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.

இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,

அம்பாறை மாவட்டத்தில் தேநீர் தயாரிக்க பயன்படுத்திய எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று காலை குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.

வழமை போன்று தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை இயக்கிய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ நேரத்தில் குறித்த எரிவாயு அடுப்பினை இயக்கி விட்டு வெளியில் சென்ற வேளை இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல்,

புத்தளம் நகரிலும் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புத்தளம் மேஹர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சமையலடுப்பு வெடித்துள்ளது.

எனினும் சம்பவம் காரணமாக எவருக்கும் காயமேற்படவில்லை குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

புத்தளம் நகரில் இதுவே முதலாவது வெடிப்புச் சம்பவமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *