பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை அழித்திருக்கிறார்கள்…… நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!!
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது.
மேலும்,
மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.
அந்நகரில் சிக்கியுள்ள மக்கள் பதுங்கு குழியிலும், கட்டிடங்களின் அடித்தளங்களிலும் தவித்தபடி உள்ளனர்.
இந்தநிலையில்,
மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
அந்த தியேட்டர் மீது ரஷ்யா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலில்,
தியேட்டர் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஆனால்,
தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுப்பு தெரிவித்து உள்ளது.
மரியுபோல் நகரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 13 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றும்,
இன்னும் அந்நகருக்குள் 4 லட்சம் பேர் சிக்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர் தொடங்கி 3 வாரம் கடந்து விட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றன.
கீவ்வின் புறநகர் பகுதிகளை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள் அங்கு தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல்,
கீவ் நகருக்குள்ளும் ஏவுகணைகள் வீசப்பட்டு வருகிறது.
ஆனாலும்,
ரஷ்ய படையால் கீவ் நகருக்குள் இன்னும் நுழைய முடியவில்லை.
அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
2ஆவது பெரிய நகரமான கார்கிவ்விலும், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தபடி இருக்கின்றது.
அதேபோல்,
மற்ற நகரங்களிலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தபடி இருப்பதாகவும் வான்வழி தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில்,
ரஷ்யாவின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.
தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய விமானங்களை உக்ரைன் இராணுவத்தினர் தாக்கி அழித்தனர் என்று தெரிவித்து உள்ளனர்.