உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால்……வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை
ஒமைக்ரோன் திரிபு தீவிரவமாக பரவி வரும் நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால், நீண்ட காலத்திற்கு அந்த பரீட்சையை நடாத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை உரிய காலத்தில் நடாத்த தவறினால், சில வருடங்களுக்கு பரீட்சையை நடாத்த முடியாத அபாய நிலை காணப்படுகின்றது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ (Lakkumar Fernando) தெரிவித்துள்ளார்.
ஒத்தி வைக்கப்படக்கூடியவை எவை ஒத்தி வைக்கப்பட முடியாதவை எவை என்பதனை கருத்திற் கொண்டு அதன் அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் ஏனைய தரங்களில் கற்கும் மாணவ மாணவியருக்கு இணைய வழியில் கற்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவியர் மட்டுமன்றி ஏனைய தரங்களில் கற்கும் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய இணைய வழி கற்பித்தல் நடைமுறை பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்களும் கொரொனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.