வட மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வராவிட்டால் அபிவிருத்தி செய்ய முடியாது – சுகாதார அமைச்சர்!!
வட மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான திட்ட வரைபு, வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தாலும், போதுமான நிதி உதவி கிடைக்காததால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போனதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலை, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் ஆறு வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிதி உதவியை பெற்றுக்கொள்ள திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் திட்டத்தில் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கம் இல்லை என குறிப்பிட்டார்.
வைத்தியசாலைகளை புனரமைப்பதாக இருந்தால், மாகாணங்கள் ஊடாக புனரமைக்க முடியும் அல்லது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிதியின் மூலம் புனரமைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசாங்கத்திற்கு வைத்தியசாலைகளின் நிர்வாக அலகு முற்றாக மாற்றப்பட்டன் பின்னரே அபிவிருத்தி செய்ய முடியும் என கூறுவதை வடக்கில் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
வட மாகாண வைத்தியசாலைகளை வழங்கத் தயார் இல்லை என்றால், சுகாதார அமைச்சுக்கு மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு நிதி உதவிகளை வழங்கும் இயலுமை இல்லை என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இதனிடையே, ஒலுவில் துறைமுகத்தை கடற்றொழில் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.