கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன????

கருப்பு பூஞ்சை (Black Fungus) அல்லது மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) எனப்படும் நோய் தற்போது இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது.

அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை சுமார் 8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுகிறது.

மிகவும் அரிதாக உண்டாகும் இந்த மியூகோர்மைகோசிஸ் தொற்று பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது.

COVID-19 தொற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்ட் (ஊக்க மருந்து) மருந்துகள் மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதல் பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் நம்புகின்றனர்.

மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்றால் என்ன?

மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண், தாவரங்கள், உரம், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது.

இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட இது காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், HIV / எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ளவர்களுக்கு உயிருக்குக் கூட ஆபத்தை இது விளைவிக்கக்கூடியது.

இலங்கையில் மியூகோர்மைகோசிஸ் தொற்று

மியூகோர்மைகோசிஸ் தொற்று இலங்கைக்கு புதிதல்ல. 2019 ஆம் ஆண்டு 42 நோயாளர்களும் 2020 இல் 24 பேரும், 2021 இல் இதுவரையான காலப்பகுதிக்குள் 24 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் எவருக்கும் COVID தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

எனினும், பூமத்திய கோட்டிற்கு நெருங்கிய நாடான இலங்கையில் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதற்கு தேவையான அனைத்து சுற்றுச்சூழல் காரணிகளும் உள்ளதாக பூஞ்சை நோய் நிபுணர், மருத்துவர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.

இவர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள பிரிவின் தலைவராக உள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மட்டத்தில் உள்ள நோயாளர்களுக்கே இந்த நோய் அதிகம் பரவுவதாகவும் இந்நோயை குணப்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் இலங்கையில் உள்ளதாகவும் பூஞ்சை நோய் நிபுணர் பிரிமாலி ஜயசேகர குறிப்பிட்டார்.

நோய் அறிகுறிகளும் தாக்கமும்

கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காது, தாடை பகுதிகளில் வலி, வீக்கம் காணப்படும். பல் வலி போல் தாடையில் வலி இருக்கும்.

ஒற்றைத் தலைவலி, மூக்கில் இரத்தம் வருவது கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.

கருப்பு பூஞ்சை தாக்கிய பகுதியை பரிசோதனை செய்து பார்த்தால் அங்கு கருப்பு நிறத்தில் இந்த பூஞ்சைகள் காணப்படும். இதன்காரணமாக இந்நோய்க்கு கருப்பு பூஞ்சை என பெயரிடப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்கும்.

ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும் மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, ஆர்த்ரைட்டிஸ் நோய் பாதிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ‘immuno suppression’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிகரிக்கும். மூச்சுத் திணறலை குறைக்க ஸ்டீராய்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

கருப்பு பூஞ்சை நோய் படிப்படியாக கண் பார்வையை பாதிக்கும்.

கருப்பு பூஞ்சை அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் நோயில் இருந்து மீண்டு விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *