யாழில் 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் – வெளியானது பரபரப்பு தகவல்கள்
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது 8 மாத குழந்தையை துன்புறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, அந்த தாய் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற இலங்கை பெண்கள் சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கைக்கு வருகை தந்த பெண்கள் அனைவரும் குழந்தைகளை அழைத்து வந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
இவ்வாறு வருகை தந்த பெண்களில் இவரும் ஒருவர் என்பது தற்போது விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குவைட் நாட்டில், இந்திய பிரஜையொருவருடன் தான் தங்கியிருந்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே, குறித்த குழந்தை கிடைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
தான் குவைட்டில் சட்ட ரீதியாகவே, இந்திய பிரஜையுடன் தங்கியிருந்ததாகவும், அவருடன் சட்ட ரீதியாக தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த 8 மாத குழந்தையின் பிறப்பு சான்றிதழ் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேலதிக நடத்தி வருகின்றனர்.