யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர சேவை பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நேரத்தில் வடகிழக்கின் நிருவாக மொழியான தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அத்தோடு இங்கு இருக்கும் சகல வர்த்தக நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம்.

அவ்வாறான இடங்களை நாங்கள் திருத்தி அமைத்துக்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது மன வருத்தத்திற்குரியது.

அந்த வகையில் இதன் பெயர் மாற்றத்தை செய்யாத பட்சத்தில் யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் என்ற அடிப்படையில் நான் கலந்துகொள்ள போவதில்லை.

ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கனிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை.

இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இந்த பெயரை மாற்றுவேன் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *