யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் என சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் அது பிழையான செய்தி என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங் காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனினும் அது தொடர்பில் தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
யாழ் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் சுகாதார பிரிவினரால் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை சில பத்திரிகைகளில் சில தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை என சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.