வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடம் இன்று 28/10/2026 மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், ஐந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மருத்துவப் பிரிவின் பங்களிப்புடன் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று (28/10/2026 ) காலை 10 மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், மொத்தம் 65 அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேருந்துப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

மேலும்,

குறித்த பரிசோதனைகள் இன்று முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.