இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி மாத்தளை மாவட்டத்தின் தேவஹுவ பகுதியில் பிறந்த அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அரசியல் தலைவர்களில் ஒருவராவார்.

கல்விப் பின்னணி

தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் பயின்றார்.

பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து, விஞ்ஞானமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

அரசியல் பயணம்

1987ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1997ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றார்.

2000ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 2004ஆம் ஆண்டு விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.

2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி (NPP) உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார்.

இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்க, 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

இந்நிலையில், இன்று தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொடர்பான தகவல்கள் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.