இலங்கையின் பல நகர்ப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ நிலையை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் காற்றுத் தரக் குறியீடு (SL AQI) 88 முதல் 120 வரையான மட்டத்தில் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீட்டைக் கணக்கிடுவதில் PM2.5 எனப்படும் மிக நுண்ணிய துகள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துகள்கள் சுவாசத்தின் ஊடாக நுரையீரலுக்குள் சென்று பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில், காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வலியுறுத்தியுள்ளது.
