அரசாங்கத்தின் தற்போதைய மின்சக்திக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தால், அடுத்த ஆண்டு முதல் நாட்டில் மின்வெட்டு ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
சூரிய மின்சக்தி உற்பத்தி தொடர்பாக முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைப் பத்திரம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய மின்சாரக் கொள்கையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கூரைகளில் சூரிய மின்படலங்களைப் பொருத்தும் செயற்பாடு இலங்கை மின்சார சபை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, பகல் நேரங்களில் அதிகளவிலான சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும், அந்த மின்சாரத்தைச் சேமித்து இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான போதிய கட்டமைப்பு மின்சார சபையிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2030ஆம் ஆண்டளவில் அதிகரிக்கக்கூடிய சூரிய மின்சார உற்பத்தியைக் கையாள்வதற்கான தயார்நிலை போதுமானதாக இல்லாவிட்டால், மின்கட்டமைப்பில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, மழைவீழ்ச்சி குறைவாகக் காணப்படும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழலில், அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்று வழியாக அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். இதனால் மின்சார உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கான மின்சாரக் கட்டணங்களும் கணிசமாக உயரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சூரிய மின்சார உற்பத்தியைத் தடுக்காமல், அதனைச் சேமித்து தேவையான நேரங்களில் பயன்படுத்துவதற்கான முறைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு யோசனைகளில் ஒன்றாக ‘Zero Export’ முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறையின் கீழ், கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின்படலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை மின்சார சபைக்கு வழங்க முடியாது. இதனால், பகல் நேரங்களில் உற்பத்தியாகும் மேலதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும் தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
முன்னர் நடைமுறையில் இருந்த Net Metering முறையில் மின்சார சபை ஒரு வகையான மின்சாரச் சேமிப்பகமாகச் செயற்பட்ட நிலையில், புதிய நடைமுறையில் அந்த வசதி இல்லாமல் போகலாம்.
இதன் காரணமாக, சூரிய மின்சக்திப் பலகைகளைப் பொருத்துவதற்கான செலவுடன் மேலதிகமாக மின்கலங்களையும் (Battery Storage) கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, சூரிய மின்சக்தி உற்பத்தியைச் சரியான முறையில் நிர்வகித்து, மின்சாரத்தைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தவறினால், எதிர்காலத்தில் மின்வெட்டு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு போன்ற சவால்களை நாடு எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
