யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளைப் பகுதியில் திடீரென வீசிய மினி சுழல் காற்றினால் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை தொடர்ந்துவரும் நிலையில், நேற்று (நாள்) பிற்பகல் சுமார் 4 மணியளவில் ஆழியவளைப் பகுதியில் இந்தச் சுழல் காற்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அருணோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தையல் நிலையம் ஒன்றும் இரண்டு வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. மேலும், இரண்டு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.