இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மீட்கப்படும் அனாதையான மற்றும் காயமடைந்த யானைக் குட்டிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில், பொலனறுவைக்கு அண்மையிலுள்ள கலாஹாகல பகுதியில் புதிய யானைகள் பராமரிப்பு மையமொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 15 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த மையத்தை நிறுவுவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான காணியை ஒதுக்க வனவிலங்குத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பொலனறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பராமரிப்பு மையம் அமைக்கப்படுவதன் மூலம், மீட்கப்படும் யானைக் குட்டிகளை உடவலவை யானைகள் பராமரிப்பு மையத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தற்போது தேவைப்படும் ஏழு முதல் ஒன்பது மணிநேரப் பயண நேரத்தை, ஒன்று அல்லது இரண்டு மணிநேரமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட யானைக் குட்டிகளுக்கு விரைவாகச் சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் யானைகள் தொடர்பான ஆராய்ச்சியாளருமான கலாநிதி சுமித் பிலபிட்டிய கருத்துத் தெரிவிக்கையில், மீட்கப்படும் யானைக் குட்டிகளைப் பராமரித்து, பின்னர் அவை மீட்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் மீண்டும் விடுவிப்பதற்கு இந்த மையம் உதவியாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் காணப்படும் மூன்று முக்கிய யானைக் கூட்டங்களுக்கு இடையிலான இயற்கையான பிரிவினையைப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்,

புதிய மையத்தின் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனக் கருதப்படுகிறது.