கல்கிரியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மனேருவ பகுதியில் அமைந்துள்ள வம்படுவெவ ஏரியில் முதலை தாக்கியதில், 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மனேருவ மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று (24) மாலை பெண் ஒருவருடன் ஏரிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, ஏரியில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் மாணவன் அமர்ந்திருந்த வேளையில், அப்பகுதியில் மறைந்திருந்த முதலை திடீரென அவரைப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், பிரதேச மக்களால் மாணவனின் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
வம்படுவெவ ஏரியில் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்கும் இரண்டாவது சிறுவன் இவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இதற்கு முன்னரும் குறித்த ஏரியில் முதலைத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் தனது கையின் ஒரு பகுதியை இழந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிரியகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
