யாழ்ப்பாணம் தனியார் முச்சக்கர வண்டி சாரதியார் சங்கக் கட்டடத்தில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் Uber நிறுவனத்தின் பிரதிநிதியாக திரு. தவதீசன் அவர்களும், PickMe நிறுவனத்தின் பிரதிநிதியாக திரு. ஜெசிந்தன் அவர்களும் கலந்துகொண்டனர்.

தனியார் முச்சக்கர வண்டி சாரதியார் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்துடன் இணைந்த சாரதிகளுக்கும் செயலி (App) ஊடாக சேவையாற்றும் சில சாரதிகளுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, இருதரப்பினருக்கும் இடையிலான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தி, சுமுகமான சேவைச் சூழலை உருவாக்கும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  1. இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணப் பகுதிகளில் கட்டை காட்சட்டை அல்லது ஸ்கின்னி ரக T-சேர்ட் அணிந்து சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை.
  2. சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, அங்குள்ள சாரதிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.
  3. குறிப்பிட்ட இடத்தில் சங்கத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் நிற்கும் நிலையில், வீதியோரம் செல்லும் பயணிகளை இடைமறித்து சவாரிக்கு அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட சாரதியின் சேவை நிரந்தரமாக முடக்கப்படும்.
  4. இருதரப்பினரும் வாய்த்தர்க்கம் அல்லது தேவையற்ற முரண்பாடுகளில் ஈடுபடக்கூடாது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும்.
  5. குறித்த இடங்களில் சவாரிகளை ஏற்றாமல் பிரச்சினைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு ஆதரவாக இருதரப்பு சங்கத்தினரோ அல்லது நிறுவனப் பிரதிநிதிகளோ தலையிடமாட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட தீர்மானங்களையும் விதிமுறைகளையும் மீறிச் செயற்படும் சாரதிகள் இன்று முதல் அனைத்து செயலி அடிப்படையிலான சேவைகளிலிருந்தும் முற்றாகத் தடை செய்யப்படுவார்கள் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி போக்குவரத்துச் சேவையை ஒழுங்குபடுத்தி, சாரதிகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

PasangaFM – மக்களுக்கான செய்தி, மக்களின் குரல்!

நீங்கள் தவறவிட்டவை