அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், எலான் மஸ்க்குடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான தேர்தல்களுடன், பல மாகாணங்களின் ஆளுநர் பதவிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடைபெற்றிருந்தன.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 218 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஜனநாயகக் கட்சி 242 இடங்களையும், குடியரசுக் கட்சி 151 இடங்களையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்த உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்குடன் தொடர்புடைய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, குறித்த இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பில் மாத்திரம் நேற்று (04) சுமார் 130 பில்லியன் அமெரிக்க டொலர் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்தலுக்கு முன்னர் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவையும் தற்போது நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய நாணய மதிப்பில் சுமார் 4,246 கோடி ரூபாவாகும்.
எனினும், தேர்தலில் குடியரசுக் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதுடன், பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளதாகக் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
