கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து, கிளிநொச்சி – A9 பிரதான வீதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 62 வயதுடைய ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரான பெருமாள் கணேசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப்பயிற்சியை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட போது, யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
எனினும், வைத்தியர்களின் தொடர் முயற்சிகளுக்கும் மத்தியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
ஓய்வுபெற்ற அதிபரின் மரணம் அப்பகுதி மக்கள், உறவினர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வீதிகளில் பயணிக்கும் போது வேகக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
